நாக்பூர்,
புரோ கபடி லீக்கில் பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி மயிரிழையில் தோல்வியை தழுவியது.
12 அணிகள் இடையிலான 5வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த 12வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாசும், பெங்களூரு புல்சும் (பி பிரிவு) மோதின.
விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் அணி 10வது நிமிடத்திலேயே தமிழ் தலைவாசை ஆல்அவுட் செய்து புள்ளிகளை மளமளவென அள்ளியது. தலைவாஸ் வீரர்கள் பல தடவை ரைடுக்கு சென்று வெறுங்கையுடனே திரும்பினர். முதல் பாதியில் 823 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் மோசமான நிலையில் பரிதவித்தது.
இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினர் புதிய வியூகம் அமைத்து துடிப்புடன் செயல்பட்டனர். எதிரணியை ஆல்அவுட் ஆக்கிய அவர்கள் சரிவில் இருந்து எழுச்சி பெற்றனர். 5 நிமிடங்கள் எஞ்சி இருந்த போது 2230 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கிய தமிழ் தலைவாஸ் அணி மறுபடியும் ஒரு முறை பெங்களூருவை ஆல்அவுட் செய்து வேகமாக நெருங்கியது.
கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் 3031 என்ற கணக்கில் ஆட்டத்தை கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த சூழலில் பெங்களூரு வீரர் ரோகித் குமார் வெற்றிகரமாக ரைடு செய்து ஒரு புள்ளி எடுக்க, பதிலடியாக தமிழ் தலைவாஸ் வீரர் பிரபஞ்சனும் ஒரு புள்ளி எடுத்தார். அதற்குள் ஆட்ட நேர முடிவுக்கு வந்ததால் தமிழ்தலைவாஸ் அணி 3132 என்ற புள்ளி கணக்கில் நூலிழை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரோகித் குமார் 11 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 6 புள்ளிகளும் எடுத்தனர்.
தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் தோற்று இருந்த அறிமுக அணியான தமிழ் தலைவாசுக்கு இது 2வது தோல்வியாகும். பெங்களூரு அணிக்கு 2வது வெற்றியாகும்.
இதே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபாங் டெல்லி மும்பை (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ் உத்தரபிரதேச யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.