பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் - குஜராத் லயன்ஸ் அணிகள் களம் காணுகின்றன.
இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் குஜராத் அணியை எதிர்த்து கடைசி இடத்தில் இருக்கும் புனேரி பல்தான் அணி களம் காண உள்ளது.
கடந்த ஆட்டத்தில் களமிறங்காத புனேரி பல்தான் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் சவுத்ரி இந்த போட்டியில் பங்கேற்பார் என தெரிகிறது. அவருடன் இணைந்து விஷால் பரத்வாஜ் மற்றும் பவன் காடியான் ஆகியோரும் களமிறங்குவதால் புனேரி அணி வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும்.
கடைசியாக விளையாடிய அரியானா அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி இம்முறை வெற்றி பெற முனைப்பு காட்டும். அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ராகேஷ் நார்வால், ரவீந்தர் பாஹல் ஆகியோர் ஜொலிப்பார்கள் என தெரிகிறது.
இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 6 முறை வென்றுள்ளது, புனேரி பல்தான் அணி 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.அதனால், இப்போட்டியில் குஜராத் அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.