சென்னை,
வீரன் அழகு முத்துக்கோன் நினைவு மாநில அளவிலான கபடி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப்., வருமான வரி, சென்னை மாநகர போலீஸ், அசோக் பிரதர்ஸ், ஜாலி பிரண்ட்ஸ் உள்பட 16 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ், கபடி ஸ்டார், ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 16 அணிகளும் கலந்து கொள்கின்றன. நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி தினசரி மாலை 5 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரமும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். பரிசளிப்பு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு வழங்குகிறார்.
இந்த தகவலை தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எத்திராஜ், ஒருங்கிணைப்பாளர் கோபி, சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.