சென்னை,
சுவீடன் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி அங்குள்ள ஒரிப்ரோ நகரில் நடந்தது. இதில் 10 வயதான சென்னை வீராங்கனை எம்.ஹன்சினி பங்கேற்றார். மினி கேடட் பிரிவில் களம் இறங்கிய ஹன்சினி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதி ஆட்டத்தில் அவர் 12-10, 9-11, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் லுலியா புகோவ்கினாவிடம் (ரஷியா) போராடி தோல்வி அடைந்தார். அரைஇறுதிக்கு வந்ததன் மூலம் ஹன்சினிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
இதே போல் புடாபெஸ்டில் நடந்த ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான சென்னையைச் சேர்ந்த சரத்கமல்- சத்யன் ஜோடியினர், ஜெர்மனியின் பெனடிக் டுடா-பாட்ரிக் பிரான்சிஸ்கா இணையை எதிர்கொண்டனர். விறுவிறுப்பான இந்த மோதலில் சரத்கமல்-சத்யன் இணை 5-11, 9-11, 11-8, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.