பாங்காக்,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில், கலப்பு இரட்டையர் ஆட்டமொன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை, மலேசியாவின் கோ லியூ யிங் மற்றும் சான் பெங் சூன் இணையை எதிர்த்து விளையாடியது.
75 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் இந்திய இணை 18-21 என்ற செட் கணக்கில் முதல் செட்டை பறிகொடுத்தது. ஆனால், அடுத்த இரண்டு செட்களையும் அதிரடியாக விளையாடி கைப்பற்றியது. இதனால், 18-21, 24-22, 22-20 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி சாய்ராஜ் மற்றும் அஸ்வினி இணை வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, அரையிறுதி போட்டிக்கு இந்திய இணை தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். அவர் அடுத்த போட்டியில் ரேட்சனோக் இன்டானனை எதிர்த்து விளையாடுகிறார்.