பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு - பளுதூக்குதல் வீரர் சதீஷ்குமார்

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு என சென்னை திரும்பிய பளுதூக்குதல் வீரர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என்று காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய சதீஷ்குமார் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ்குமார் மொத்தம் 317 கிலோ எடைதூக்கி (ஸ்னாட்ச்-144 கிலோ, கிளன் அண்ட் ஜெர்க்-173 கிலோ) மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். வேலூர் மாவட்ட சத்துவாச்சாரியை சேர்ந்த 26 வயதான சதீஷ்குமார் 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.

தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் விமானம் மூலம் நேற்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் சதீஷ்குமாரை, அவரது தந்தை சிவலிங்கம், தாயார் தெய்வாணை, பயிற்சியாளர் முத்து மற்றும் உறவினர்கள், ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் சதீஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காலில் தசைநார் கிழிந்ததால் தான் என்னால் காமன்வெல்த் போட்டியில் எதிர்பார்த்த எடையை தூக்க முடியவில்லை. இருப்பினும் மீண்டும் தங்கப்பதக்கத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பதக்கத்தை பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் அர்ப்பணிக்கிறேன். எனது காயத்துக்கு சிகிச்சை எடுப்பது குறித்து டாக்டரை அணுக இருக்கிறேன். டாக்டர்களின் ஆலோசனை படி சிறிது காலம் ஓய்வு எடுத்து விட்டு, பிறகு பயிற்சியை தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன். அடுத்து ஆகஸ்டு மாதம் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் கவனம் செலுத்த இருக்கிறேன்.

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்காகும். இன்னும் கூடுதலாக 30 கிலோ எடை தூக்கினால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும். அதனை அடைய கடுமையாக உழைப்பேன். பதக்கம் வென்றதும் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த ஊக்கத்தொகை என்னை போன்ற விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை