புதுடெல்லி,
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டில் கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ (87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்க இந்திய அளவில் தகுதி பெற்ற முதல் வீராங்கனையும் மீராபாய் சானுதான். அதுமட்டுமல்லாமல் பளுதூக்குதல் பிரிவில் மகளிர் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் சானு மட்டும்தான். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்றால் சம்பந்தப்பட்ட பயிற்சியாளருக்கு ரூ.12.5 லட்சமும், வெள்ளி வென்றால் ரூ.10 லட்சமும், வெண்கலம் வென்றால் ரூ.7.5 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலர் ராஜீவ் மேத்தா கூறுகையில், வீரர், வீராங்கனைகளுடன் டோக்கியோவில் பயிற்சியளித்த பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு இது பெரிதளவில் ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். மீராபாய் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.