டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில், இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரரும், உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் மன் காய் சூ-வுடன் மோதினர். இதில் 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். இதனையடுத்து பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5 ஆவது தங்கத்தை பெற்றுத் தந்தார் கிருஷ்ணா நாகர். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் 1999ஆம் ஆண்டு பிறந்தவர் கிருஷ்ணா நாகர். இவருக்கு 2 வயதாக இருந்தப் போது உயரம் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும் 14 வயது முதல் பேட்மிண்டன் விளையாட்டில் தீவிர பயிற்சியை மேற்கொண்டார். 2016ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.
குறிப்பாக சர்வதேச போட்டிகளுக்கு முன்பாக இரண்டு முறை தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம், 2020ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி ஆகியவை வென்று அசத்தினார். மேலும் இந்த ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக நடைபெற்ற துபாய் பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.