நியூயார்க்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் விரைவாக ஓட்டி சென்ற கார், லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்றது. அப்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. ஜுபிடர் ஐலேண்ட் பகுதியில் குடியிருப்பு சாலையில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. அவருடைய கார் கவிழ்ந்தது.
எனினும், டைகர் வுட்சுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. அவர் மதுபோதையில் காரை ஓட்டி சென்றுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கு சுவாச பரிசோதனையும் நடத்தப்பட்டது. எனினும், அடுத்த கட்ட விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.
குறுகலான குடியிருப்பு பகுதியில் காரை விரைவாக ஓட்டியுள்ளார் என கூறப்படுகிறது. இதில் விபத்து ஏற்படுத்தியதற்காக, அவர் கைது செய்யப்பட்டார். புளோரிடா சட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் உள்ளூர் சிறையில் எட்டு மணிநேரம் அவர் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், இதுபோன்று மதுபோதையில் காரை ஓட்டிய குற்றச்சாட்டின் கீழ் டைகர் வுட்ஸ் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடைய வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதன்பின்னர் 2023-ம் ஆண்டு அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கோல்ப் விளையாட்டில் 15 முறை வெற்றி பெற்று பட்டம் வென்றவரான வுட்ஸ், கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் மற்றொரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.