பிற விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் இன்று தொடக்கம் - தொடக்க விழாவை புறக்கணிக்க இந்தியா முடிவு..!

குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க விழாவை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

ஒலிம்பிக் போட்டி போல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உறைபனியில் நடத்தக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இதில் இடம் பெறும்.

இதன்படி 24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் ஒரே வீரராக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார். ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்பீடு ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் நடைபெறுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் போட்டி நடைபெறுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதன் பிரமாண்டமான தொடக்க விழா பீஜிங்கில் உள்ள பறவைக்கூடு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைக்கிறார். விழாவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையே, தொடக்க மற்றும் நிறைவு விழாவை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டு காயமடைந்த சீன படையின் கமாண்டர் கியூ பபாவுக்கு குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை தொடர் ஓட்டமாக எடுத்து செல்லும் வாய்ப்பை சீனா வழங்கியுள்ளது.

சீனாவின் இந்த செயலால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறுகையில், ஒலிம்பிக் போன்ற நிகழ்ச்சிகளை சீனா அரசியலாக்க முயற்சிப்பது வருத்தம் அளிக்கிறது. குளிர்கால ஒலிம்பிக் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றார். இதே போல் தூர்தர்ஷனும் தொடக்க மற்றும் நிறைவு விழாவை ஒளிபரப்பு செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

சீனாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த நாட்டு அதிகாரிகள் ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் அந்த நாட்டு வீரர்கள் போட்டியில் களம் இறங்குவார்கள்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்