புடாபெஸ்ட்,
கடந்த 19-ந் தேதி தொடங்கிய உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11.45 மணிக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், செக்குடியரசு வீரர் ஜாகுப் வாட்லெஜ், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பெர், இந்தியாவின் டி.பி.மானு, கிஷோர் குமார் ஜெனா உள்பட 12 பேர் கலந்து கொள்கிறார்கள்.
அரியானாவை சேர்ந்த 25 வயது நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். அவர் இந்த முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றினால், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திரம் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.