லிவர்பூல்,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த மகளிருக்கான 80 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி 3-2 என்ற கணக்கில் போலந்து இளம் வீராங்கனை எமிலியா கோடர்ஸ்காவை போராடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. உலக குத்துச்சண்டையில் அவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதே பிரிவில் ஏற்கனவே மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் அரையிறுதியை எட்டி பதக்கத்தை உறுதி செய்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ) 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மமாஜானோவா குமோராபோனுவை வீழ்த்தி அரையிறுதியை எட்டியதோடு, பதக்கத்தையும் உறுதி செய்தார்.
அதே சமயம் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீரர் அபினாஷ் ஜாம்வால் 1-4 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான லஷா குருலியிடம் (ஜார்ஜியா) தோல்வியை தழுவினார்.