பாலி,
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் கடந்த 1ந்தேதி தொடங்கியது. இதில் நடப்பு உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-16 என்ற நேர்செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கினார்.
இதனையடுத்து, அவர் அடுத்த லீக் ஆட்டத்தில் யோனி லியை (ஜெர்மனி) எதிர்கொண்டார். இந்த போட்டியில், 21-10, 21-13 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்தினார். 31 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், பாலி நகரில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, ஜப்பானின் அகானே யமகச்சிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார்.
எனினும், அகானே விடாமல் போராடினார். இதனால், முதல் செட்டை கைப்பற்றிய சிந்துவுக்கு அடுத்த செட்டில் அகானே அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து 3வது செட்டில் கடுமையாக போராடி சிந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
2 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவரான சிந்து, தென் கொரிய வீராங்கனையான ஆன் சியங்கை எதிர்த்து, நாளை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுகிறார்.