பிற விளையாட்டு

உலக பளுதூக்குதல்: 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை சாதனை

உலக பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தினத்தந்தி

அனாஹெய்ம்,

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள அனாஹெய்ம் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்றார்.

கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில பதற்றத்தில் எடைதூக்காமல் ஏமாற்றம் அளித்து வெளியேறிய மீராபாய் சானு அந்த குறையை போக்கும் வகையில் உலக போட்டியில் அபாரமாக செயல்பட்டு அசத்தினார். அவர் ஸ்னாட்ச் முறையில் 85 கிலோவும், கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 109 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தார். அத்துடன் அவர் தேசிய சாதனையும் படைத்தார்.

தாய்லாந்து வீராங்கனை சுக்ஷரோன் துன்யா ஸ்னாட்ச் முறையில் 86 கிலோவும், கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 107 கிலோவும் என மொத்தம் 193 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், அயர்லாந்து வீராங்கனை செகுரா அனா ஸ்னாட்ச் முறையில் 81 கிலோவும், கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 101 கிலோவும் என மொத்தம் 182 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை வெல்வது கடந்த 22 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி தான் கடைசியாக 1994, 1995-ம் ஆண்டுகளில் நடந்த உலக பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். 23 வயதான இந்தியன் ரெயில்வே வீராங்கனையான மீராபாய் சானு மணிப்பூரை சேர்ந்தவர் ஆவார்.

தங்கப்பதக்கம் கழுத்தில் விழுந்த போது ஆனந்த கண்ணீர் விட்ட மீராபாய் சானு நிருபர்களிடம் கூறுகையில், எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மாவின் வழிகாட்டுதல் இல்லையெனில் என்னால் இந்த சாதனையை படைத்து இருக்க முடியாது. உயர் நிலையிலான போட்டிகளில் வெற்றியை ருசிக்க நானும், எனது பயிற்சியாளரும் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம். ரியோ ஒலிம்பிக்கில நான் பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. அந்த போட்டியில் நான் செய்த தவறை நினைத்து இன்னும் வருந்துகிறேன். எனது பலவீனங்களில் கவனம் செலுத்தி அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன் என்றார்.

பளுதூக்குதலில் பலம் வாய்ந்த ரஷியா, சீனா, கஜகஸ்தான், உக்ரைன், அஜர்பைஜான் ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் ஊக்க மருந்து தடை சர்ச்சை காரணமாக இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற மீராபாய் சானுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளனர். அவர்கள் டுவிட்டர் பதிவில் மீராபாய் சானுவின் சாதனையால் இந்தியா பெருமைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இதே போல் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங், வீராங்கனை மேரிகோம், பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மணிப்பூர் முதல்-மந்திரி பிரென்சிங் ஆகியோரும் சமூக வலைதளங்கள் மூலம் மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு