அகமதாபாத்,
அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசனா சாம்பியன்ஷிப் 2026 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த தொடரில் போட்டியை நடத்திய இந்திய அணி 102 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 114 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 4 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் 79 நாடுகளைச் சேர்ந்த 522 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். உலகம் முழுவதிலிருந்தும் வந்த போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், இந்திய வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினர்.
இந்த தொடரில் மொத்தம் 31 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு பதக்கமாவது வென்றன. அதேநேரத்தில் 10 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கமாவது கைப்பற்றின. பதக்கப் பட்டியலில் ஜப்பான் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அர்ஜெண்டினா மூன்றாவது இடத்தை கைப்பற்றியது.
யோகாவின் பிறப்பிடமான இந்தியா, முதல் உலக யோகாசனா சாம்பியன்ஷிப்பிலேயே பதக்க வேட்டையில் ஆதிக்கம் செலுத்தி உலக அரங்கில் தனது வலிமையை நிரூபித்துள்ளது.