பிற விளையாட்டு

கொலை வழக்கு:மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் - டெல்லி போலீஸ்

கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுசில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

பல காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாகர் தன்கட் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து மல்யுத்த வீரர் சுசில் குமாரைத் தேடி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக சுசில் குமாரை அரியானா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மல்யுத்த வீரர் சுசில் குமார் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

அதேபோல இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் மற்றொரு நபரான அஜய் குறித்துத் தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லி ஐகோர்ட் மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமின் கோரி, சுசில் குமார் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.