மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நடந்து வந்தன. இதில், ஆடவர் பிரிவு ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விளையாடினர்.
இதில், உலக தரவரிசையில் முதல் நிலையில் உள்ள ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் போராடி கைப்பற்றினார். எனினும், அடுத்து அதிரடி காட்டிய ஜோகோவிச் இரு செட்டுகளையும் எளிதில் கைப்பற்றினார்.
இதனால், போட்டியில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால் தொடர்ந்து 3வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சாதனையை அவர் படைத்துள்ளதுடன் இது அவரது 9வது ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியாகும்.
இதுவரை ஜோகோவிச் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகிய இருவரும் 20 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்களை நெருங்கும் வகையில் ஜோகோவிச் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 30 வயதுக்கு மேல் ஜோகோவிச் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ரபேல் நடாலின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.