பாரீஸ்,
உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்த ரஷிய புயல் மரிய ஷரபோவா சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 32 வயதான ஷரபோவா 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் ஆவார்.
2004-ம் ஆண்டு ஷரபோவா தனது 17-வது வயதில் செரீனா வில்லியம்சை நேர் செட்டில் தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும், 2008-ல் ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனிலும் மகுடம் சூடினார். விளம்பர படங்களிலும், டென்னிசிலும் கொடிகட்டி பறந்த ஷரபோவா அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனையாக அடையாளம் காணப்பட்டார்.