டியான்ஜின்,
டேவிஸ் கோப்பை டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1-ன் இரண்டாவது ரவுண்ட் சுற்று போட்டி இந்தியா-சீனா அணிகள் இடையே டியான்ஜின் நகரில் இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், சுமித் நாகல் நேர் செட்டில் தோல்வி அடைந்தனர். இதனால் இந்தியா 0-2 என்ற கணக்கில் பின்தங்கியது.
2-வது நாளான நேற்று எஞ்சிய மூன்று ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இந்திய வீரர்கள் களம் புகுந்தனர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- ரோகன் போபண்ணா ஜோடி 5-7, 7-6 (5), 7-6 (3) என்ற செட் கணக்கில் சீனாவின் மாவ் ஸின் காங்- ஸி ஜாங் இணையை வீழ்த்தியது. முதலில் பெயசுடன் இணைந்து ஆட தயக்கம் காட்டிய போபண்ணா பிறகு முக்கியமான ஆட்டம் என்பதை உணர்ந்து கைகோர்த்தார்.
இதையடுத்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் தமிழகத்தின் ராம்குமார் 7-6 (4), 6-3 என்ற நேர் செட்டில் சீனாவின் டி வுவை வீழ்த்தி, முந்தைய தோல்விக்கு பரிகாரம் தேடிக்கொண்டதுடன் போட்டியை 2-2 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தார். அடுத்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சுமித் நாகலுக்கு பதிலாக பிரஜ்னேஷ் குணேஸ்வரனை இந்திய அணியின் விளையாடாத கேப்டனான மகேஷ் பூபதி களத்திற்கு அனுப்பினார். கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஆடிய சென்னையை சேர்ந்த குணேஸ்வரன் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் யிபிங் வுவை விரட்டினார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து உலக குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்திய வீரர் 44 வயதான லியாண்டர் பெயஸ் டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்து புதிய உலக சாதனை படைத்தார். இது அவருக்கு 43-வது இரட்டையர் வெற்றியாகும். இதற்கு முன்பு இத்தாலியின் நிகோலா பியட்ரான்ஜெலியுடன் பெயஸ் 42 வெற்றிகளுடன் சமநிலையில் இருந்தார்.
1990-ம் ஆண்டு தனது 16-வது வயதில் டேவிஸ் கோப்பை டென்னிசில் அடியெடுத்த வைத்த லியாண்டர் பெயஸ் தொடர்ந்து 28 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். லியாண்டர் பெயசும், மகேஷ் பூபதியும் ஜோடியாக டேவிஸ்கோப்பையில் தொடர்ந்து 24 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் பயணித்தது இந்திய டென்னிசில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
லியாண்டர் பெயஸ் கூறுகையில், சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது ஒரு இந்தியர் இந்த சாதனையை வைத்திருப்பது நமது விளையாட்டு துறைக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த சாதனை நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன் என்றார்.