டென்னிஸ்

போட்டியில் தோல்வி; பெண் நடுவரை பாலியல் ரீதியாக விமர்சித்த வீரருக்கு அபராதம்

இதுபோன்ற அனைத்து வகையான பாலியல் ரீதியிலான விமர்சனங்களையும் கண்டிக்கிறோம் என்றும், நடுவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாரீஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பராகுவே நாட்டு வீரரான அடால்போ டேனியல் வல்லெஜோ மற்றும் பிரான்ஸ் நாட்டின் மொய்சே கவுவாமி ஆகியோர் விளையாடினர்.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டி முடிவில், 6-3 7-5 3-6 2-6 7-6 (10-8) என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் வெற்றி பெற்றார். 4 மணிநேரம் மற்றும் 56 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில் பெண் நடுவரை பாலியல் ரீதியாக டேனியல் விமர்சித்தது சர்ச்சையானது.

போட்டி நடுவராக இருந்த பிரேசில் நாட்டின் அனா கார்வால்ஹோ, ரசிகர்களை கட்டுப்படுத்த தவறி விட்டார் என டேனியல் குற்றச்சாட்டாக கூறினார். அவர கூறும்போது, இதுபோன்ற போட்டிகளுக்கு ஆண் ஒருவர் நடுவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பெண் நடுவர், அந்த பணியை செய்வது என்பது மிக கடினம். ஏனெனில், கூட்டத்தினரின் கூச்சல் அதிகம் இருந்தது. அதற்கு எதிராக நீங்கள் செயல்பட உங்களுக்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்று கூறினார்.

அவடைய இந்த பேச்சுக்கு ரோலண்ட் கார்ரோஸ் போட்டி தொடர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபோன்ற அனைத்து வகையான பாலியல் ரீதியிலான விமர்சனங்களையும் கண்டிக்கிறோம் என தெரிவித்ததுடன், நடுவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றும் கூறியது. இந்த விசயத்தில், டேனியலுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.