மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் புதிதாக நம்பர் ஒன் இடத்தை பிடிக்க உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். ஸ்வியாடெக் தொடர்ச்சியாக பெற்ற 15-வது வெற்றி இதுவாகும். அவர் அடுத்து ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) சந்திக்கிறார்.
அதே சமயம் மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டேனியலி காலின்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் அரைஇறுதி சுற்றில் ஒசாகா, ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறார்.