பாரீஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து 19 வயதே ஆன ஜோவாவோ பொன்சேகா விளையாடினார்.
இந்த போட்டியில், முதல் 2 செட்டுகளை ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டை அவர் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த செட்டை பொன்சேகா கைப்பற்றினார். இதனால், ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்தடுத்த 2 செட்டுகளையும் கைப்பற்றி போட்டியை அவர் தன்வசப்படுத்தினார்.
4 மணிநேரம் மற்றும் 53 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் முடிவில், 4-6, 4-6, 6-3, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை, பொன்சேகா வீழ்த்தி வெற்றி பெற்றார். 25-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறும் ஜோகோவிச்சின் கனவு, இதனால் தகர்ந்து போனது.
கடந்த 2 நாட்களுக்கு முன், உலக தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், அர்ஜென்டினாவை சேர்ந்த ஜுவான் மானுவேல் செருந்துலோ இடையேயான போட்டியில், இதேபோன்று, முதல் 2 செட்டுகளை 3-6, 2-6 என்ற புள்ளி கணக்கில் சின்னர் எளிதில் வெற்றி பெற்றார்.
3-வது செட்டிலும் 5-1 என்ற புள்ளி கணக்கில் சின்னர் முன்னிலை வகித்தபோது, ஜுவானின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. 7-5 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை அவர் கைப்பற்றினார். அடுத்த 2 செட்டுகளையும் ஜுவான் கைப்பற்றி சின்னருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதனால், போட்டியில் 3-6, 2-6, 7-5, 6-1, 6-1 என்ற புள்ளி கணக்கில் சின்னரை வீழ்த்தி ஜுவான் வெற்றி பெற்றார்.