லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று குலுக்கல் (டிரா) மூலம் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது முதல் சுற்றில் லாயிட் ஹாரிசை (தென்ஆப்பிரிக்கா) சந்திக்கிறார். அவரது பிரதான எதிரியான ரபெல் நடால் (ஸ்பெயின்) முதல் ரவுண்டில் யுச்சி சுகிதாவுடன் (ஜப்பான்) மோதுகிறார். எல்லாம் சரியாக அமைந்தால் அரைஇறுதியில் பெடரரும், நடாலும் நேருக்கு நேர் மோத வேண்டி வரும். நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் சவாலை ஜெர்மனியின் கோல்ஸ்கிரீபருடன் தொடங்குகிறார். ஒற்றையர் பிரிவில் ஆடும் ஒரே இந்தியரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஸ் குணேஸ்வரன் முதல் சுற்றை தாண்டுவதே சிக்கல் தான். தரவரிசையில் 94-வது இடம் வகிக்கும் அவர் முதல் ரவுண்டில் 17-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ராவ்னிக்குடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. முதல்முறையாக விம்பிள்டனில் கால்பதிக்கும் குணேஸ்வரன் கூறுகையில், ராவ்னிக் கடினமான எதிராளி. ஆனால் அவரை என்னால் தோற்கடிக்க முடியும். இது நல்ல சவாலாகும் என்றார்.