டென்னிஸ்

இன்று கோலாகலமாக தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் : ரூ.820 கோடி பரிசுத்தொகை... சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்?

அடுத்த மாதம் 12-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.

லண்டன்,

டென்னிஸ் உலகின் மிகவும் கவுரவமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இன்று (ஜூன் 29) லண்டனில் கோலாகலமாக தொடங்குகிறது.

ஆண்கள் ஒற்றையர்

அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 7 முறை விம்பிள்டன் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் பென் ஷெல்டன், ரஷியாவின் டேனில் மெட்விடேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர்.

பெண்கள் ஒற்றையர்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரைபகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கோகோ காப் மற்றும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா ஆகியோருக்கு இடையே பட்டத்திற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செரீனா கம்பேக்

23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விம்பிள்டனில் களமிறங்குகிறார். 44 வயதான அவர், முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் 20 வயது வீராங்கனை மாயா ஜாயின்டை நாளை எதிர்கொள்கிறார்.

பரிசுத்தொகை

இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.820 கோடி. ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு தலா ரூ.46 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகின்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல்கள் நேரலையில் ஒளிபரப்புகின்றன.