டென்னிஸ்

உலக டென்னிஸ்: பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் ‘சாம்பியன்’

உலக டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தினத்தந்தி

லண்டன்,

ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. டாப்8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டி தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 26 வயதான கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா)டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2 மணி நேரம் நீடித்தது. முதல் இரண்டு செட்டிலும் இருவரும் மாறி, மாறி புள்ளி குவித்ததால் பரபரப்பு நிலவியது. கடைசி செட்டில் டிமிட்ரோவ் ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் டிமிட்ரோவ் 75, 46, 63 என்ற செட் கணக்கில் டேவிட் கோபினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தரவரிசையில் முன்னேற்றம்

உலக போட்டியில் முதல்முறையாக கால் பதித்த டிமிட்ரோவ் முதல் முயற்சியிலேயே பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறார். 1998ம் ஆண்டில் ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் கொரெட்ஜா முதல் முயற்சியிலேயே பட்டம் வென்று இருந்தார். அதன் பிறகு அறிமுக போட்டியிலேயே பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை டிமிட்ரோவ் பெற்றுள்ளார்.

ஜூனியர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள டிமிட்ரோவ் வென்ற மிகப்பெரிய பட்டம் இதுவாகும். தோல்வியை சந்திக்காமல் பட்டத்தை வென்ற டிமிட்ரோவுக்கு ரூ.16 கோடி ரொக்கப்பரிசும், 1,500 தரவரிசை புள்ளியும் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் டிமிட்ரோவ் உலக ஒற்றையர் தரவரிசையில் 6வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். நம்பர் ஒன் இடத்தில் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 2வது இடத்தில் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) உள்ளனர். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட டேவிட் கோபின் தரவரிசையில் 8வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.

இரட்டையர் பிரிவு

வெற்றிக்கு பிறகு டிமிட்ரோவ் அளித்த பேட்டியில், இந்த வெற்றி அற்புதமானது. என்னை பொறுத்தமட்டில் இது நம்பமுடியாத சாதனையாகும். கடந்த காலங்களில் நான் சிறந்த ஆட்ட முடிவுகளை கொடுத்து இருக்கிறேன். இதுபோன்ற போட்டிகளில் நான் இன்னும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வருங்காலங்களில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஹென்றி கான்டினன் (பின்லாந்து)ஜான் பியர்ஸ் (ஆஸ்திரேலியா) ஜோடி 64, 62 என்ற நேர்செட்டில் லூகாஸ் குபோட் (போலந்து)மார்செலோ மெலோ (பிரேசில்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியது. கடந்த ஆண்டும் (2016) இந்த ஜோடி வென்று இருந்தது. பாப்மைக் பிரையன் (2003, 2004) ஜோடிக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டையர் பட்டத்தை வென்ற இணை என்ற பெருமையை ஹென்றி கான்டினன்ஜான்பியர்ஸ் ஜோடி பெற்றது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்