லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனும், தரவரிசையில் 11-வது இடம் வகிப்பவருமான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), 15-ம் நிலை வீராங்கனையான கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.
தொடக்கத்தில் இருவரும் தங்களது சர்வீஸ்களில் மட்டும் புள்ளிகளை எடுத்த வண்ணம் இருந்தனர். 5-5 என்று வரை சமநிலை நீடித்தது. 11-வது கேமில் தான் திருப்பம் ஏற்பட்டது. இதில் வீனஸ் பந்தை வெளியே அடித்து விட்டு அடுத்தடுத்து தவறுகளை இழைக்க, இந்த சர்வீசை முகுருஜா பிரேக் செய்ததுடன், முதல் செட்டையும் தனதாக்கினார்.
இரண்டாவது செட்டில் முகுருஜாவின் அதிரடியான ஷாட்டுகளை சமாளிக்க முடியாமல் வீனஸ் மிரண்டார். ஒரு கட்டத்தில் பதற்றத்திற்குள்ளாகி நம்பிக்கை இன்றி ஆடினார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முகுருஜா ஒரு கேமை கூட இழக்காமல் 2-வது செட்டில் வீனசை ஊதித்தள்ளி விட்டார்.
1 மணி 17 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீனசை தோற்கடித்து முதல் முறையாக விம்பிள்டன் மகுடத்தை சூடினார். 1994-ம் ஆண்டு கொஞ்சிதா மார்ட்டினசுக்கு பிறகு விம்பிள்டன் ஒற்றையர் ஆட்டத்தை ருசித்த முதல் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ஆவார். வெற்றியின் மூலம் நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் முகுருஜா 5-வது இடத்தை பெறுகிறார்.
37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 5 டபுள்பால்ட்டுடன் பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தானாக செய்யக்கூடிய தவறுகளை 25 முறை செய்ததால் சரண் அடைய வேண்டியதாகி விட்டது.
23 வயதான முகுருஜாவுக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி இருந்தார். பட்டம் வென்ற அவருக்கு ரூ.18 கோடியும், 2-வது இடத்தை பிடித்த வீனசுக்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.