பெரம்பலூர்,
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளை தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 21,153 பேர் எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் 201617ம் ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு 32 மையங்களில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அரசு, அரசு உதவிபெறும், தனியார், மெட்ரிக் என 136 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 5,245 மாணவர்கள், 4,519 மாணவிகள் என மொத்தம் 9,764 மாணவமாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
தேர்வுக்காக முதன்மை கண்காணிப்பாளர்களாக 32 தலைமை ஆசிரியர்களும், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 10 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர்களாக 32 தலைமை ஆசிரியர்களும், அறைகண்காணிப்பாளர்களாக 555 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பறக்கும் படை
தேர்வில் துண்டு சீட்டு வைத்திருத்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களை கண்டுபிடிக்க 60 பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வினாத்தாள்களை போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்வதற்காக 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.
21,153 பேர் எழுதுகின்றனர்
அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 164 உயர், மேல் நிலைப்பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் 36 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். 5,473 மாணவர்கள், 5,916 மாணவிகள் என மொத்தம் 11,389 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வானது வருகிற 28ந்தேதி நிறைவு பெறுகிறது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மொத்தம் 21,153 பேர் எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.