கடலூர் முதுநகர்
வட கிழக்கு வங்கக்கடலில் மியான்மரில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பங்களாதேஷ் மற்றும் மியான்மர் இடையே இரவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று மாலையில் முன்னறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய தாக்கம் இருக்காது என்றாலும், கடல் சற்று சீற்றத்துடனும், காற்று சற்று வேகத்துடனும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று மாலை 5 மணிக்கு ஏற்றப்பட்டது.
இதேப்போல் நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தூரத்தில் புயல் உருவாகி இருக்கிறது என்பதை முன்எச்சரிக்கை செய்வதற்காக ஏற்றப்படுவதாகும்.