திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆதிவாசிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மோசடியாக வாங்கிய போலி சாதி சான்றிதழ்களை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் கொரோனா தொற்று பரவும் விதமாகவும் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பை சேர்ந்த 50 பெண்கள், 34 ஆண்கள் என 84 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அதே போல திருவள்ளூர் மாவட்ட பழங்குடி மலைசாதி மக்கள் நலச்சங்கம் சார்பில் திரளான மலைசாதி மக்கள் முற்றுகையிட்டு மலைசாதி மக்களுக்கு சாதி சான்று வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பழங்குடி மக்கள் நல சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு என 95 ஆண்கள், 110 பெண்கள் என மொத்தம் 205 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.