மாவட்ட செய்திகள்

பாச்சலூர் மாணவி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பாச்சலூரில் அரசு பள்ளி வளாகத்தில் மாணவி தீயில் எரிந்து பலியான வழக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.

திண்டுக்கல்:
பாச்சலூரில் அரசு பள்ளி வளாகத்தில் மாணவி தீயில் எரிந்து பலியான வழக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
பள்ளி மாணவி மரணம்
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (வயது 10). இவள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி வழக்கம் போல் மாணவி பிரித்திகா பள்ளிக்கு சென்றாள்.
மேலும் காலை 11 மணிக்கு வகுப்பறையில் இருந்து அவள் வெளியே சென்றாள். அதன்பின்னர் அவள் திரும்பிவரவில்லை. இதனால் சக மாணவிகள் அவளை பள்ளி வளாகத்தில் தேடினர். அப்போது விளையாட்டு மைதானத்தில் பிரித்திகா தீயில் எரிந்து உடல் கருகி கிடந்தாள். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதேநேரம் பிரித்திகா கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் மாணவி பிரித்திகாவின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இதற்கிடையே பிரித்திகா வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாணவி பிரித்திகா வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையிலான போலீசார், மாணவி பிரித்திகா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
அதேநேரம் மாணவியின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடித்தால் தான், அதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய முடியும். எனவே மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாச்சலூக்கு சென்று விசாரணை நடத்தினர்.