புதுச்சேரி

விளையாட்டு பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளியில்சேர தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளியில்சேர தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுவை பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு பள்ளி

புதுவை அரசின் கல்வித்துறையால் ராஜீவ்காந்தி விளையாட்டுப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. உப்பளத்தில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் செயல்படும் இந்த பள்ளியில் தகுதியான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தடகளம், இறகுப்பந்து, கால்பந்து, ஆக்கி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக மாணவர்களுக்கு தங்குமிடம், விளையாட்டு ஆடைகள், அசைவ உணவு வகைகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை

இந்த விளையாட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே தகுதி போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

1-1-2011 அன்று அல்லது அதற்கு பிறகோ பிறந்த மாணவர்களே தகுதி போட்டியில் கலந்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தினை புதுவை உப்பளத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளியில் அலுவலக நேரங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் பள்ளியில் உள்ள உடற்கல்வி விரிவுரையாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை அணுகி தாங்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

உடல் தகுதி தேர்வுகள் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 24-ந் தேதியும், மாகி நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-ந் தேதியும், கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந் தேதியும், ஏனாம் ஒய்.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் 2-ந் தேதியும், காரைக்கால் விளையாட்டு மைதானத்தில் 6-ந் தேதியும், உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் 9-ந் தேதியும் நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பாகூரில் வருகிற 23-ந் தேதிக்குள்ளும், மாகியில் 25-ந் தேதிக்குள்ளும், கலிதீர்த்தாள்குப்பத்தில் 29-ந்தேதிக்குள்ளும், ஏனாமில் செப்டம்பர் 1-ந் தேதிக்குள்ளும், காரைக்காலில் 5-ந் தேதிக்குள்ளும், புதுச்சேரியில் 8-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.