மாவட்ட செய்திகள்

மாணவர்களின் வெற்றி வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தடியடி நடத்தப்பட்டது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டை முன்வைத்து போராட்டம் நடத்திய மாணவர்களின் வெற்றி வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தடியடி நடத்தப்பட்டுள்ளது என்று கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் சிவானந்தா காலனியில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி தலைமை தாங்கினார். கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆ.நாச்சிமுத்து வரவேற்றார். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் இரா.தமிழ்மணி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு 1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழக கலாசாரத்தை, பண்பாட்டை காப்பாற்றுவதற்காக ஜல்லிக்கட்டை முன்வைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் நம்முடைய கலாசாரத்தை காப்பாற்றியிருக்கிற மாணவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தடியடி நடத்தியதற்கு காரணம் என்ன?

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை முதலில் அரசு வேடிக்கை பார்த்தது. ஒருவார காலம் அமைதியாக போராட்டம் நடந்தது. போராட்ட முடிவில் நாம் எண்ணிய எண்ணம் நிறைவேறக்கூடிய நேரத்தில் அது வெற்றி போராட்டமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருக்கிறார்கள். இதற்கு அவசியம் என்ன?.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு சென்னை திரும்புகிறார். அவர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை விடுக்கிறார். ஆனால் மறுநாள் மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடந்திருக்கிறது. இந்த பிரச்சினையில் காவல்துறையினர் பலி கடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றது என்ற செய்தி வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கலவரம் காவல் துறை மூலம் ஏற்படுத்தப்பட்டது. தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் புகுந்து விட்டன என்று காரணம் கூறுகிறார்கள்.

பா.ஜனதா காலூன்ற முடியாது

அவசர சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் மாணவர்கள் ஏன் தொடர்ந்து போராட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வராத நிலையில் 3 நாட்களில் அவசர சட்டம் கொண்டு வந்தது ஏன் என்று தான் மாணவர்கள் கேட்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் மாணவர்கள் இப்போது போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை இருந்தபோதே தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டை நடத்தி காட்டினோம்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது ஜல்லிக்கட்டுக்கு ஜனாதிபதியின் அனுமதியை ஏன் பெறவில்லை என்று கேட்கிறார். ஆனால் தி.மு.க. ஆட்சியின்போது ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்பதை ஏன் அவர் சொல்லவில்லை. அது அவருடைய ஆத்திரத்தின் வெளிப்பாடு. அதனால் தான் அவர் சொல்லவில்லை. எனவே பா.ஜனதா கட்சி தமிழகத்தில் எந்த காலத்திலும் காலூன்ற முடியாது.

சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் வந்தபோது அதை தி.மு.க. மனமுவந்து ஆதரித்தது. டெல்லியிலிருந்து சென்னை வந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதற்கு என்ன காரணம்?. இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய அறப்போராட்டம் போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்தது கிடையாது. அப்படிப்பட்ட மாணவர்களை சமூக விரோதிகள் என்று வாய்கூசாமல் சொல்கிறார்களே?.

சிறுவாணி ஆறு, பவானி ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவை கண்டிக்காதது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்காதது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு காரணமாகத்தான் இந்த போராட்டம் நடந்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தை பார்க்கும்போது நமக்கெல்லாம் ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது என்னவென்றால் தமிழ் மொழி மத்தியில் விரைவில் ஆட்சி மொழியாகி விடும் என்ற நம்பிக்கை இப்போது வந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ப.பைந்தமிழ்பாரி, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. பிரமுகர் டி.ஆர்.சண்முகசுந்தரம், நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் சாமிநாதன், நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக், கோவை வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் அம்சவேணி செல்வராஜ், எஸ்.கிருபா சபரிநாதன், வக்கீல் மகுடபதி, குறிச்சி நகர செயலாளர் குறிச்சி நா.பிரபாகரன், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.ராஜன், துணை செயலாளர் அரசூர் அன்பரசு, தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ். செல்வராஜ், சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிரஸ் மணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தளபதி முருகேசன், திராவிடமணி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெ.நா.உதயகுமார் நன்றி கூறினார்.

வரவேற்பு

தி.மு.க. செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு மு.க.ஸ்டாலின் நேற்று முதல் முறையாக கோவை வந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாரை தப்பட்டை முழங்கவும், முளைப்பாரி ஏந்தியும், பலூன்களை பறக்கவிட்டும் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் உடல்நலம் குன்றியுள்ள தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், இரா.மோகன், க.ரா.சுப்பையன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ஆ.நடராஜன் ஆகியோரின் இல்லங்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்.