மாவட்ட செய்திகள்

அரசியல் சூழ்ச்சியில் மாணவர்கள் விழுந்து விடக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ஜல்லிக்கட்டு விவகார போராட்டத்தில் அரசியல் சூழ்ச்சியில் மாணவர்கள் விழுந்து விடக்கூடாது என்று வேலூரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

வேலூர்,

மாநாடு

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் அகண்ட தமிழ் உலகம் என்ற 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆற்காட்டிலிருந்து திண்டிவனம் வரையிலும், திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான மாநில சாலை தேசிய சாலையாக்கப்படும். வேலூர் மாநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த பணிகள் நடைபெறும் போது வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும். வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடப்பவர்கள் வாகன விபத்தில் அடிப்பட்டு இறக்கின்றனர். எனவே அந்தபகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவாக நடைபெறும்.

ஜல்லிக்கட்டு விவகாரம்

தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தி.மு.க. மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மட்டும் அல்லாமல் மீனவர் பிரச்சினை, இலங்கை அகதிகள் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் எல்லாம் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியினர் செய்த பிரச்சினைகள் தான். தற்போது போராட்டம் நடத்தும் தி.மு.க. போன்ற கட்சிகள் கடந்த 5 மாதங்களாக ஏன் போராட்டம் நடத்தவில்லை. அப்போது அவர்கள் எங்கே போனார்கள். ஆனால் தற்போது பாரதீய ஜனதா அரசு மீது பழி போடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டின் வருங்காலம் மாணவர்கள். அவர்களின் உணர்வு பூர்வமான போராட்டத்தை மதிக்கிறோம். இவர்கள் இதுபோன்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்த கூடாது என்பதற்காகவே பாரதீய ஜனதா கட்சி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கைகளை எடுத்தது.

அரசியல் சூழ்ச்சியில்...

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு அனுமதியும் வாங்கியது. இதையடுத்து நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தயவு செய்து மாணவர்கள் அரசியல் சூழ்ச்சியில் விழுந்து விடக்கூடாது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசை குறை கூறுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை. குற்றம் சாட்டுபவர்களே குற்றவாளிகள். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து விவசாய துறை மந்திரியிடம் பேசினேன். அவர் மாநில அரசு இதுவரை அறிக்கை தரவில்லை என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூறினார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி, கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் தசரதன், செயலாளர் எஸ்.எல்.பாபு, பொருளாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் தரிசனம் செய்து சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.