மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய மந்திரி நேரில் ஆய்வு

பரமக்குடி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய மந்திரி நேரில் ஆய்வு செய்தார்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய மந்திரி நேரில் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை மந்திரி நாராயணசாமி பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உரப்புளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட நாற்றாங்கால் பண்ணை அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த பலவிதமான மரக்கன்றுகளை பார்வையிட்டு அந்த கன்றுகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறது, எங்கெங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்பு அரியனேந்தல் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடு திட்டத்தை பார்வையிட்டார். பின்பு அரியனேந்தல் ஊராட்சியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்ட பணிகளை பார்வையிட்டார்.

கலந்து கொண்டவர்கள்

அவருடன் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரயுராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உரப்புளி நாகலட்சுமி ரவீந்திரன், அரியனேந்தல் மணி முத்து, துணைத்தலைவர் பாப்பா சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.