திண்டுக்கல்:
பணி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி திண்டுக்கல்லில் அரசு பஸ்களை இயக்காமல் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரைவர்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல்லில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, சென்னை, பெங்களூரு, குமுளி உள்பட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பணியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டு டிரைவர்கள் பணிக்கு சென்றனர். இதற்கிடையே நேற்று மதியம் அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் மீண்டும் பஸ்களை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில் இருந்து வெளியூர், சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்பட வேண்டிய 18 பஸ்கள் இயக்கப்படவில்லை.
பொதுமக்கள் அவதி
திண்டுக்கல் பஸ் நிலையம், போக்குவரத்து கழக பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேநேரம் மதியம் முதல் மாலை வரை பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்து அவதி அடைந்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். அதன் பின்னரே பஸ்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து சி.ஐ.டி.யூ மண்டல பொதுச்செயலாளர் ராமநாதன் கூறுகையில், திண்டுக்கல்லில் நிறுத்தம் அதிகமுள்ள வழித்தடம், கூடுதல் பணி என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பணியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.
இதனால் மனஅழுத்தத்துடன் பணியாற்றும் நிலை உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. இனிமேலும் தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.