கூடலூர்,
தமிழக- கேரள எல்லையில் நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், நம்பியார்குன்னு, சோலாடி மற்றும் குஞ்சப்பனை ஆகிய 6 இடங்களில் வாகன நுழைவு வரி சோதனைச்சாவடிகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக வருவாய் துறையினர் சுங்க வரி வசூலித்து வந்தனர்.
இந்த நிலையில் வாகன நுழைவு வரி வசூலிக்கும் பணியை வருவாய் துறையினர் மேற்கொள்ள கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஊழியர்கள் பற்றாக்குறையால் நெடுஞ்சாலைத்துறை பணியை வருவாய் துறையினர் மேற்கொள்ள வில்லை என கூறப்படுகிறது. இதனால் வருவாய் துறையினர் மாநில எல்லைகளில் நுழைவு வரி வசூலிக்கும் பணியை நிறுத்தினர்.
ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் நுழைவு வரி வசூலிக்கும் பணியில் ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வாகன நுழைவு வரி வசூலிக்கப்பட வில்லை. இதனால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. எனவே உடனடியாக ஊழியர்களை நியமித்து நுழைவு வரி வசூலிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சோதனைச்சாவடிகளில் நுழைவு வரி வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை நெடுஞ்சாலைத்துறை நியமித்து உள்ளது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு சோதனைச்சாவடியில் 2 பேர் பணியாற்றி வருகின்றனர். இரவு- பகல் என 2 வேளைகளிலும் சுழற்சி முறையில் வரி வசூலில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசுக்கு வருவாய் வரத்தொடங்கி உள்ளது. இருப்பினும் இரவு பகலாக வரி வசூலிக்கும் பணியில் 2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளதால் ஒருவர் விடுமுறை எடுத்தால் ஒருவர் மட்டுமே வரி வசூலிக்கும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல் இரவில் வரும் வாகனங்களிடம் நுழைவு வரி வசூலிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் வரி வசூலிக்கும் பணியை ஒழுங்குபடுத்தி அரசுக்கு வருவாய் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.