மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியர் வீட்டில் 70 பவுன் தங்க நகைகள் கொள்ளை

ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியர் வீட்டில் 70 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுககல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கருவூல காலனியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 48). அவருடைய மனைவி கலைச்செல்வி (45). இவர்கள் இருவரும் முத்துநாயககன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகன் நரேஷ் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.

இந்தநிலையில் பிளஸ்2 தேர்வு நடந்து வருவதால் தனது மகனை பார்ப்பதற்காக கடந்த 3ந் தேதி இளங்கோ வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் பரமத்திவேலூருக்கு சென்றார். பின்னர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து பிளஸ்2 தேர்வு எழுதும் தனது மகனை ஊக்கப்படுத்தி வந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் இளங்கோவின் வீட்டின் குளியல் அறை ஜன்னல் கம்பியை கடப்பாரையால் நெம்பி எடுத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இளங்கோ தனது மனைவியுடன் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த 70 பவுன் தங்கநகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோ ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

போலீசாரின் விசாரணையில், இளங்கோ தனது மனைவியுடன் வெளியூர் சென்றிருந்ததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் குளியல் அறை ஜன்னல் கம்பியை நெம்பி எடுத்து வீட்டுக்குள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் சமீபகாலமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.