யு.பி.ஐ. பரிவர்த்தனை 
தொழில்நுட்பம்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் - மத்திய அரசு

75,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கு, அதிகபட்சமாக ரூ. 300 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

புதுடெல்லி,

யு.பி.ஐ. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0.4 சதவீதம் கட்டணம்

அதேநேரத்தில், கடைகளில் ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் வர்த்தக யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கு, அதிகபட்சமாக ரூ. 300 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ.5 கட்டணம்

மேலும், ரெயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட வணிக பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.

அக்டோபர் 15-ம் தேதி முதல் அமல்

பொதுமக்கள் கடைகளில் செய்யும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் ரூ.500, ரூ.1,500 அல்லது சரியாக ரூ.2,000 வரை எதுவாக இருந்தாலும் எவ்வித கட்டணமும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த யு.பி.ஐ. வணிக பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

எம்.டி.ஆர். கட்டணம்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான எம்.டி.ஆர். கட்டண சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த கூடாது என்று இந்திய தேசிய பண பரிவர்த்தனைக் கழகம் சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் என்பிசிஐ தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இது தொடர்பான முக்கிய விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

வணிகர்களே ஏற்க வேண்டும்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை கடைக்காரர்கள் அல்லது வணிகர்களே ஏற்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இந்தச் சுமையை வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட கூடாது.

கூடுதல் கட்டணத்திற்கு தடை

யு.பி.ஐ. செயலிகளும் வாடிக்கையாளர்களிடம் எந்தவிதமான பிளாட்ஃபார்ம் கட்டணத்தையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ வசூலிக்க அனுமதி இல்லை. யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினால் 2 சதவீதம் கூடுதல் கட்டணம் தர வேண்டும்" என்று கடைக்காரர்கள் யாரேனும் கூறினால், அது விதிகளை மீறும் செயலாகும்.

புகார் அளிப்பது எப்படி?

விதிகளை மீறி கூடுதல் கட்டணம் கேட்கும் கடைக்காரர்கள் அல்லது நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இது குறித்து நீங்கள் பயன்படுத்தும் யு.பி.ஐ. செயலி மூலமாகவோ அல்லது நேரடியாக இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்திடமோ புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT