குளித்தலை
குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல், கோவிலில் கம்பம் நடுதல் மற்றும் பூச்சொரிதல் விழா கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் பக்தர்களால் எடுத்து வரப்பட்டது. அன்று இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாவிளக்கு போடுதல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதையடுத்து தூக்குத் தேர் தலை அலங்காரம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தீ மிதித்தல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யர்மலை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.