கொள்ளேகால்:
மந்திரி உமேஷ் கட்டி ஆய்வு
மாநில வனத்துறை மந்திரி உமேஷ் கட்டி, சாம்ராஜ்நகருக்கு நேற்றுமுன்தினம் வந்தார். அவர், ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலை வனப்பகுதியை, வனத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாதேஸ்வரன் வனவிலங்கு சரணாலயத்தை, புலிகள் காப்பகமாக அறிவித்தால் வனச்செல்வம் பெருகும். மாதேஸ்வரன் வனவிலங்கு சரணாலயத்தை, புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டாம் என்று மந்திரி வி.சோமண்ணா தெரிவித்துள்ளார்.
மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
ஒரு வனத்துறை மந்திரியாக, வனவிலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாப்புக்கு புலிகள் காப்பகம் ஒரு நல்ல யோசனை என்பதை நான் உணர்கிறேன். மேலும் மலைமாதேஸ்வரா சாமியின் வாகனம் புலி என்பதால் மாதேஸ்வரன் மலை வனவிலங்கு சரணாலயத்தை புலிகள் காப்பகமாக அறிவிப்பது நல்லதாகும். ஆனாலும் இவ்விவகாரத்தில் மந்திரிசபை கூட்டத்தில் பேசி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு எடுப்பார்.
பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு குடிநீர் தேவை உள்ளது. எனவே, மேகதாது திட்டத்தை கட்டாயம் செயல்படுத்துவோம். வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தப்படும். சாங்கடி கிராமம் சீரமைப்பு திட்டம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து 2 மாதங்களுக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மந்திரி உமேஷ் கட்டியுடன் மாதேஸ்வரன் மலை வனத்துறை அதிகாரி ஏடுகுண்டலு உள்ளிட்டோர் இருந்தனர்.