மாவட்ட செய்திகள்

வறட்சியால் 90 சதவீத பயிர்கள் பாதிப்பு மத்திய குழுவினர் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக, வறட்சியால் 90 சதவீத பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

வறட்சியால் பயிர்கள் கருகின

வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் ஏற்பட்ட வறட்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஆண்டுதோறும் இயல்பான மழை அளவு 602 மில்லி மீட்டராகும். ஆனால் கடந்த ஆண்டு 385 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டில் இயல்பான மழை அளவை விட 38 சதவீதம் குறைவாக கிடைத்துள்ளது.

எனவே வறட்சியின் பிடியில் சிக்கியதால் சேதமான பயிர்கள் குறித்து தமிழக அரசு சார்பில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 89 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பயிரிட்டு இருந்ததில், வறட்சியின் காரணமாக 63 ஆயிரத்து 563 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த பயிர்கள் கருகி சேதமாகியது கண்டறியப்பட்டது.

மத்திய குழு வருகை

இந்த நிலையில் வறட்சி பாதிப்பு குறித்து பார்வையிடுவதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய குழுவினர் நேற்று திருப்பூர் வந்தனர். இந்த குழுவில் வர்த்தக விரிவாக்கம் மற்றும் வறட்சி நிர்வாக இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உதவி ஆலோசகர் சந்தோஷ், தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தீரஜ்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் நேற்று காலை ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பெரியபாளையம், திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈட்டிவீரம்பாளையம், அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாளையம் சாமந்தக்கோட்டை ஆகிய பகுதிகளில் சோளப்பயிர் பயிரிட்டு விளைநிலங்களில் கருகி கிடந்ததை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சேதம் குறித்தும், குடிநீர் ஆதாரங்கள் குறித்தும், கால்நடைகளுக்கான தீவனத்தேவை குறித்தும், பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா? என்றும் கேட்டறிந்தனர்.

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம்

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்திய குழுவிடம் கூறும்போது, பருவமழையை நம்பி மானாவாரியாக பயிரிட்டுள்ள பயிர்கள் முழுவதுமாக கருகி போய் விட்டன. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து சோளம் பயிரிட்டோம். நல்ல மகசூல் கிடைத்தால் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் பயிர்கள் முற்றிலும் கருகி விட்டதால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளோம். எனவே வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் அளித்த மனுவில், பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டு அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். விவசாயிகள் வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குறும்படம்

இதைத்தொடர்ந்து திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில், மாவட்டத்தில் பயிர் சேதங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி மற்றும் குறும்படத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். கலெக்டர் எஸ்.ஜெயந்தி, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்ட சேதமதிப்பு விவரங்கள் குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கி கூறினார். மேலும் சேத மதிப்பு விவரங்கள் கொண்ட காட்சிகளை சி.டி.யாகவும், அறிக்கையாகவும் தயாரித்து மத்திய குழுவிடம் ஒப்படைத்தார்.

ஆய்வு குறித்து வர்த்தக விரிவாக்கம் மற்றும் வறட்சி நிர்வாக இயக்குனர் விஜய் ராஜ்மோகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட 4 மத்திய குழு வந்துள்ளது. ஒவ்வொரு குழுவும் மாவட்டம் வாரியாக சென்று வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறது. எங்களுடைய குழு 8 மாவட்டங்களை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களை பார்வையிட்டுள்ளோம். இன்று(நேற்று) திருப்பூர் மாவட்டத்தை பார்வையிட்டுள்ளோம்.

90 சதவீதம் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியின் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 6 மாவட்டங்களை விட திருப்பூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையிலான குழு முழு தகவல்களையும் அளித்துள்ளனர். அதன்படி மாவட்டத்தில் வறட்சியால் 90 சதவீதம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். வறட்சி பாதிப்புகளை முழுமையாக பார்வையிட்டு வருகிற 27-ந் தேதி (நாளை) புதுடெல்லி செல்கிறோம். பின்னர் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசிடம் ஆய்வு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குருநாதன், திருப்பூர் உதவி கலெக்டர் ஷ்ரவன்குமார், உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், வேளாண்மை துறை இணை இயக்குனர் ரங்கநாதன், துணை இயக்குனர் தமிழ்செல்வன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுகந்தி மற்றும் துணை கலெக்டர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தின் சில பகுதிகளில் மத்திய குழு நேற்று ஆய்வு நடத்தி சென்றதால், மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதிக்கு மத்திய குழு வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.