மாவட்ட செய்திகள்

தேவாரம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி

தேவாரம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண், தூங்கிக்கொண்டிருந்த கணவரையும் கட்டிப்பிடித்தார். இதில் படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் தகராறு


தேனி மாவட்டம் போடியை அடுத்த தேவாரம் அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). இவர் கரியப்பகவுண்டன்பட்டியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா (32). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சுதாகருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த சுதாகர் வழக்கம் போல் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு தூங்கிவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த இலக்கியா, நள்ளிரவு வேளையில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

போலீஸ் விசாரணை


பின்னர் ஓடிச்சென்று தூங்கிக்கொண்டிருந்த கணவரையும் கட்டிப்பிடித்தார். இதனால் அவர் மீதும் தீப்பற்றி எரிந்தது. வலியால் இருவரும் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், 2 பேரும் தீயில் கருகிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 2 பேர் மீதும் பற்றிய தீயை அணைத்தனர். உடனே இது குறித்து போடி புறநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுதாகர், இலக்கியாவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் தீயில் கருகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.