கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் நாயகன் யாஷ் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், கே.ஜி.எப்.2 படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு யாஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்கள்.
முதலில் இப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இறுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.