அலைமோதும் கூட்டம்
புதுவையில் அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது உள்ளிட்ட அரசு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனாலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி காய்கறி மார்க்கெட்டுகள், உழவர்சந்தை, மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கும்பலாக நிற்பதால் தொற்று இன்னும் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாற்றப்படவில்லை
இந்தநிலையில் பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை புதிய பஸ் நிலையம், தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகம் ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது.ஆனால் இதை பெரிய மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் ஏற்கவில்லை. இதனால் புதிய பஸ் நிலையம், தட்டாஞ்சாவடிக்கு காய்கறிகள் மாற்றப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெரிய மார்க்கெட்டிலேயே காய்கறி கடைகள் செயல்பட்டன. வழக்கம்போல் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அங்கிருந்த மீன்
கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.கடைகள் இடமாற்றம் செய்யப்படாதது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவகுருநாதன் கூறியதாவது:-
பாதுகாப்பு இல்லை
காய்கறி கடைகளை புதிய பஸ் நிலைய பகுதிக்கு மாற்றினால் எங்களுக்கு வியாபாரம் நடக்காது. நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதி, பழைய ஜெயில் பகுதியில் கடைகளை நடத்த கேட்ட போது அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.புதிய பஸ் நிலைய பகுதியில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த காலம் அரசு ஒத்துழைக்கவில்லை. கடந்த முறை பஸ் நிலையத்தில் நிழல் பந்தல் எங்கள் செலவில் அமைத்தோம். பெரிய மார்க்கெட் பகுதியில் கடைகள் மூடி இருந்த காலத்திற்கும் கடை வாடகை, மின் கட்டணத்தை தவறாமல் அரசு வசூலித்தது.இதுதொடர்பாக உயர் அதிகாரிகளை சந்தித்து பேச முடிவு செய்து உள்ளோம். தொடர்ந்து பெரிய மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்த அனுமதிக்காவிட்டால் அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடைகளை மூடிவிட்டு வீட்டிலேயே இருக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.