தா.பழூர்,
தொழிலாளர் சங்க கூட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் கிராமத்தில் கை நெசவு தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கை நெசவு கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் அரிகிருஷ்ணன், சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், கைத்தறி சங்கத்தை சேர்ந்த தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செய லாளர் மணிவேல், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அழகர்சாமி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், பொருளாளர் துரைசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கடனுதவி
கூட்டத்தில், நெசவாளர் களுக்கு 50 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்க வேண்டும், தொழிலாளர் நல வாரியத்தில் அரசின் நலத்திட்டங்களை இரு மடங்காக உயர்த்தி, 15 மாதமாக நிலுவையில் உள்ள பணப்பயன்களை வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை தேவையான மாற்றம் செய்து நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் ராமானுஜம், பலராமன், அழகுதுரை, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கை நெசவு தொழி லாளர்கள் உதயநத்தம் கிராமத்தில் ஊர்வலமாக சென்றனர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.