மாவட்ட செய்திகள்

தகுதி வாய்ந்த அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்க நடவடிக்கை கலெக்டர் பேச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில், தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ரவிகுமார் கூறினார்.

தூத்துக்குடி,

வாக்காளர் தினம்

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி காமராஜ் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வாக்காளர் தினத்தையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு

நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிகுமார் பேசியதாவது:-ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பேரணிகள், மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஒவியம் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களுக்கு விளக்கப்படுகிறது.

தகுதி வாய்ந்தவர்கள்...

ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகள் எதுவும் இன்றி 18 வயது நிரம்பிய அனைவருக்கும் சமமாக வாக்குரிமை வழங்கப்படுகிறது. இளைஞர்களின் கையில் தான் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. எனவே, மாவட்டத்தில் தகுதிவாய்ந்த அனைத்து இளைஞர்களையும் வாக்காளர்களாக சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், என்று கூறினார். மாணவ-மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப், தாசில்தார்கள் சங்கரநாரயணன், ராமகிருஷ்ணன்(தேர்தல்), வ.உ.சி.கல்லூரி முதல்வர் வீரபாகு, காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக வ.உ.சி கல்லூரி வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு வழியாக ராஜாஜி பூங்கா அருகே முடிவடைந்தது.