புதுச்சேரி

அடுத்தவர் நிலத்தை காண்பித்து ரூ.40 லட்சம் மோசடி

பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை காண்பித்து ரூ.40 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

காரைக்கால், 

பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை காண்பித்து ரூ.40 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வேலைக்கார பெண் மூலம்...

காரைக்கால் கண்ணடியார் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் நிலம் வாங்க இருப்பதாக உறவினர்களிடம் கூறி வந்தார். இதை அறிந்த விஜயலட்சுமி வீட்டு வேலைக்கார பெண் இந்திரா என்பவர், தனது உறவினர் சிவக்குமார் என்பவருக்கு கடலூரில் நிலம் உள்ளதாகவும், அதை அவசரத்திற்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சிவக்குமாரிடம் நிலத்தை வாங்க முன்பணமாக ரூ.13 லட்சத்தை விஜயலட்சுமி வழங்கினார். அதன்பின் மகளின் திருமணம் மற்றும் பிற செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் வழங்கினார். இவ்வாறாக மொத்தம் ரூ.40 லட்சம் கொடுத்த பிறகும் சிவக்குமார் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. அவரிடம் பலமுறை இதுபற்றி கேட்டும், அவர் காலம் கடத்தி வந்தார்.

ரூ.40 லட்சம் மோசடி

இதனால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி, உறவினர்கள் மூலம் விசாரித்தபோது, சிவக்குமாருக்கு கடலூரில் நிலம் எதுவும் இல்லை என்பதும், அவர் மற்றொரு சிவக்குமார் என்பவரின் பெயரில் உள்ள நிலம் மற்றும் ஆவணங்களை காண்பித்து விஜயலட்சுமியிடம் ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அந்த பணத்தில் சிவக்குமார், காரைக்காலில் தனது மனைவி பெயரில் நிலம் வாங்கியுள்ளார்.

இந்த மோசடி குறித்து சிவக்குமாரிடம் விஜயலட்சுமி கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக கூறினார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதுபற்றி மீண்டும் கேட்டபோது, கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

கலெக்டரிடம் புகார்

இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட கலெக்டர் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.