மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை வழிமறித்த போலீசார் தவறி விழுந்து தம்பதி படுகாயம்; போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

சாலையின் குறுக்கே சென்று ஸ்கூட்டரை போலீசார் வழிமறித்தனர். இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தம்பதி படுகாயம்.

சிவமொக்கா

வாகன சோதனை என்ற பெயரில் திடீரென சாலையின் குறுக்கே சென்று ஸ்கூட்டரை போலீசார் வழிமறித்தனர். இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தம்பதி படுகாயம் அடைந்தனர். இதனால் போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவமொக்கா டவுன் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் மாலையில் கோபி சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் உள்பட போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்தவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கணவனும், மனைவியும் ஸ்கூட்டரில் வந்தனர். ஸ்கூட்டரை கணவன் ஓட்டி வந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரை ஓட்டி வந்ததாக தெரிகிறது.

இதைப்பார்த்த போலீசார் திடீரென சாலையின் குறுக்கே சென்று ஸ்கூட்டரை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உடனே ஸ்கூட்டரை நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தாறுமாறாக ஓடி சாலையில் உருண்டது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த அந்த நபரும், அவருடைய மனைவியும் படுகாயம் அடைந்தனர்.

இதனால் கடும் கோபம் அடைந்த அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து விதிகளை மீறி நான் வாகனம் ஓட்டியதாக நீங்கள் கருதினால் என் மீது வழக்குப்பதிவு செய்து கொள்ளுங்கள், அதற்கான அபராதத்தை நான் கோர்ட்டில் கட்டிக் கொள்கிறேன். அதை விடுத்துவிட்டு ஏன் இப்படி சாலையின் குறுக்கே வந்தீர்கள். தற்போது நானோ, என் மனைவியோ உயிரிழந்து இருந்தால் உங்களால் அதை திருப்பி தர முடியுமா? என்று கூறி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கிருந்து புறப்பட முயன்றனர். அவர்களை சிறைபிடித்த பொதுமக்கள், படுகாயம் அடைந்த தம்பதிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்களில் சிலர் படுகாயம் அடைந்திருந்த அந்த தம்பதியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு பொதுமக்கள் போலீசாரை அங்கிருந்து விடுவித்தனர். வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் திடீரென சாலையின் குறுக்கே சென்று ஸ்கூட்டரை வழிமறித்ததும், அதனால் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம் அடைந்ததும், இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசாரை பொதுமக்கள் சிறை பிடித்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.