திருப்பத்தூர்,
ஆலங்காயம் வன சரகத்திற்கு உட்பட்ட ஜவ்வாது காப்புகாடு பகுதியில் புங்கம்பட்டு நாடு ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தபுரம் கிராமம் உள்ளது. அங்குள்ள புதுஏரி கிணறு பகுதியில் இருந்து பெருமாள் கோவிலுக்கு அப்பகுதி மக்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் ஜவ்வாதுமலை பழைய பாளையத்தை சேர்ந்த ரவி என்பவர் புதுஏரி கிணறு பகுதியில் இருந்து பெருமாள் கோவில் வரை பாதை அமைக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் பாதை அமைப்பதற்காக அவர் வனத்துறையினரிடம் அனுமதி எதுவும் பெறவில்லை.
மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றி பாதை அமைத்து தரும்படி அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் வெங்கடேசனிடம் (வயது 32), ரவி கூறியிருந்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் பொக்லைன் எந்திரம் மூலம் பாதை அமைப்பதற்காக முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட தொடங்கினார்.
இதுகுறித்து திருப்பத்தூர் வன அலுவலர் தேஜஸ்விக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருப்பத்தூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் முகமதுரபி தலைமையில், ஆலங்காயம் வன சரக அலுவலர் முனியப்பன், வனவர் சஞ்சீவி மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பொக்லைன் டிரைவர் கைது
அப்போது அங்கு பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடேசனை கையும், களவுமாக பிடித்தனர். அதற்குள் வெங்கடேசன் 132 மீட்டர் நீளம், 3 அடி அகலத்திற்கு முட்புதர்களை அகற்றி அங்கு பாதை அமைத்துவிட்டார். பின்னர் வனத்துறையினர் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, வெங்கடேசனை கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் ரவியை தேடி வருகின்றனர். தேடப்படும் ரவி ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தல் வழக்கிலும் தேடப்படுபவர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் நிருபர்களிடம் கூறுகையில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதி பெறாமல் பாதை அமைப்பது குற்றமாகும், இவ்வாறு பாதை அமைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.