மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் சாவு

திருப்பத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அன்பழகன் என்கிற சாந்தகுமார் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் டைல்ஸ் கற்கள் ஒட்டும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மேகலா என்கின்ற மனைவியும் மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர். சாந்தகுமாருக்கு கடன் தொல்லை இருந்ததாக தெரிகிறது. அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

தண்டவாளத்தில் பிணம்

அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் திருப்பத்தூர்- காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே சு.பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இவருடைய மோட்டார் சைக்கிள் தண்டவாளம் அருகே இருந்தது. தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் அங்கு விரைந்தனர்.

வலுக்கும் சந்தேகம்

ரெயிலில் அடிபட்டு இறந்தால் உடலில் கோரமான காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் உடலில் எந்த காயமும் இல்லை. இதனால் அவரது சாவு மர்மத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தால்லையால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

எனினும் ரெயிலில் அடிபட்டு சாந்தகுமார் இறந்ததாக ரெயில்வே போலீசார் முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசாதனையில்தான் அவரது சாவு குறித்த விவரம் தெரியவரும் என்பதால் ரெயில்வே போலீசாரும் குடும்பத்தினரும் அதனை எதிர்பார்த்து காத்துள்ளனர்.